ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு - நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழக முதல்வரின் தாயாரை அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் ஆ.ராசாவை இன்று 6 மணிக்கு சென்னை தலைமையச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி முன் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக எம்.பி ஆ.ராசா, ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, முதல்வரை பற்றிய தெரிவித்த கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தன்னுடைய கருத்துக்கு ஆ.ராசா மன்னிப்பு கோரினார். ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடாத வகையில் நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்தது.

இதையடுத்து, திமுக எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆபாசமாக திட்டுதல், தேர்தல் நடத்தை விதிமீறல், கலகம் செய்ய தூண்டுதல் ஆகிய பரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் முதல்வர் குறித்தும், அவரது தாயார் குறித்தும் ஆ.ராசா அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் நாளை 6 மணிக்கு சென்னை தலைமையச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி முன் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.