பிரச்சார தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஆ.ராசா: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடைபெற இருப்பதால், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனையடுத்து, பிரச்சாரத்தில் ஆ.ராசா பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என்று பேசினார். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. ஆ.ராசாவின் பேச்சுக்கு கட்சித் தலைவர்கள் பலர் கண்டனங்களை தெரிவித்தனர். அத்துடன் ராசாவை இனி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு புகார் அளித்திருந்தனர்.
இதனையடுத்து, முதல்வர் பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் தன் தாயைப் பற்றி பேசி கண்கலங்கினார். என் தாயை இழிவாக பேசியவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று தழுதழுத்த குரலில் கண்ணீரோடு வேதனையை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து, ஆ.ராசா முதல்வர் எடப்பாடி வேதனைப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறினார். அதே சமயம் இந்த விவகாரம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் செல்ல, இதுகுறித்து விளக்கமளிக்க, ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அந்த வகையில் ஆ.ராசா, உள்நோக்கத்துடன் தான் பேசவில்லை என்றும் வேண்டுமென்றே பொய்யாக பாஜக புகார் அளித்துள்ளது என்று தெரிவித்தார். இருப்பினும் ஆ.ராசாவின் விளக்கம் திருப்தியாக இல்லாததால், முதல்வர் பற்றி அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் திமுக எம்.பி ஆ.ராசா 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
அத்துடன் திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலிருந்து ஆ.ராசா பெயரையும் நீக்கியுள்ளது.
இந்நிலையில் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆ.ராசா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருக்கிறது.
தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.