இனி ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது - அ.தி.மு.க சார்பில் புகார் மனு
ஆ.ராசாவின் பேச்சு முதலமைச்சர், துணை முதலமைச்சரை மட்டுமல்லாது பெண் இனத்தையே கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக அதிமுக தரப்பில் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் எழிலனை ஆதரித்து ஆ.ராசா, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பிரச்சார கூட்டத்தில், முதலமைச்சர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பற்றி ஆபாசமாகவும், வெறுக்கத்தக்க வகையிலும் பேசி இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், அ.தி.மு.க சார்பில் வீடியோ ஆதாரத்துடன் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் திருமாறன் சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்த இந்த புகார் மனு கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சருக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் பேசிய ஆ.ராசா மீது ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆ.ராசா,நேற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஆபாசமாகவும், வெறுக்கத்தக்க வகையிலும் ஆ.ராசா பேசியிருக்கிறார்.
தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சரை மட்டுமல்லாது பெண் இனத்தையே கொச்சைப்படுத்துவது போல் அவருடைய பேச்சு அமைந்துள்ளது.
ஆ.ராசா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆ.ராசா தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்று அதிகாரியிடம் புகார் அளித்துள்ளதாக கூறினார்.