ஆ.ராசா விவகாரம்: டெல்லி வரை சென்ற அறிக்கை.. தடை போடுமா தேர்தல் ஆணையம்?
ஆ.ராசா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார். திமுக எம்.பி. ஆ. ராசா பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது. அவர் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதனையடுத்து, திமுக எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆ. ராசாவின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, முதலமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என் பேச்சால் முதலமைச்சர் கண் கலங்கியதால் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.

இது குறித்து சத்யபிரதா சாகு தெரிவிக்கையில், ஆ.ராசா பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்றும், அவருக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு என்னிடம் புகார் கொடுத்தனர். ஆ.ராசா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளேன். மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல் அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தனிநபர் விமர்சனம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் அறிக்கை அனுப்பி உள்ளோம்” என்றார்.
தலைமை தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.