மர்ம நபர்கள் வைத்த தீயால் கருகிய மூலிகைகள் ..!
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1440 அடி உயரத்தில் ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலை உள்ளது. இந்த மலையில் அரியவகை மூலிகைச் செடிகள் மரங்கள் உள்ளன. இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் மலையில் தீ வைத்துள்ளனர்.
இதனால் மலையின் ஒரு பகுதி மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த மலை உச்சியில் தவளகிரீஸ்வரர் கோயிலும், விநாயகர், அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர், அண்ணாமலையாரின் சந்நிதிகளும் அமைந்துள்ளன.
திருக்கோயிலில் பிள்ளையார் கோயிலும் உள்ளது. தவளகிரீஸ்வரர் கோயிலில் இரண்டு பழங்கால கல்வெட்டுகள் இங்கு உள்ளன. பல்லவ மன்னன் 3-ஆம் நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் எட்டாம் நூற்றாண்டின் பல்லவர்கள் காலத்தில் இந்தத் தலம் சிறப்பிடம் பெற்றிருந்ததாகத் தெரிகிறது.
இதில் வெண்குன்றம் கிராமத்து சபை பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் திருக்கோவில் கார்த்திகை தீப திருவிழா நடைபெறுவதைப் போல இங்கும் நடக்கும்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே சமூக விரோத செயல்கள் இங்கே நடந்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காட்டுத்தீ பரவியது.
நேற்றும் மர்ம நபர்கள் மூலம் தீ வைக்கப்பட்டதால் தவளகிரீ ஈஸ்வர மலை முழுவதும் நெருப்பு சூழ்ந்ததால் மலையில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் மரங்கள் தீயில் எரிந்து கருகியது.
இதையடுத்து மலை எரிவது குறித்து வனக்காவலர்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்த போது வனக்காவலர்களின் தொலைபேசி எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று ஊர் மக்கள் தெரிவித்தனர்.
மேலும் தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது மலை முழுவதும் கொழுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் தவித்து நின்றனர்.
மேலும் இதுகுறித்து வந்தவாசி வடக்குப் காவல்நிலைய காவலர்கள் மலை மீது தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பல்லவர்காலத்து சிறப்பு மிக்க வனமும் வளமும் தீக்கு இரையாவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.