பூமியில் நடக்கப்போகும் அரிய நிகழ்வு... இந்தியாவில் பார்க்க முடியுமா?
ஆயிரம் விண்கற்களை பூமி கடந்து செல்லும் அரிய நிகழ்வு இன்று இரவு நடக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு மே மாதம் முழு சந்திர கிரகணம் மற்றும் வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்கள் வானில் நெருங்கி வருதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இதனைத் தொடர்ந்து மற்றொரு ஆச்சரியமும் இன்று இரவு நடக்கவுள்ளது.
பொதுவாக சூரியனை சுற்றி வட்ட பாதையில் 73பி/ஸ்க்வாஸ்மேன் வாக்மேன் என பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் ஒன்று சுற்றி வருகிறது.இது ஒவ்வொரு 5.4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை முழுமையாக சுற்றி முடிக்கும் நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்டில் மாலை நேரத்தில் பூமியில் இருந்தபடி வானில் காணலாம்.
அதிக பிரகாசம் இல்லாத இந்த வால் நட்சத்திரம் கடந்த 1995ம் ஆண்டு உடைய தொடங்கியது. உடைந்த பாகங்கள் டாவ் ஹெர்குலிட்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த உடைந்த பாகங்கள் மணிக்கு 1,000 விண்கற்களை மழையாக பொழிய கூடும் என சில வானியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுவரை 68 துண்டுகளாக இந்த வால் நட்சத்திரம் உடைந்து உள்ளது என கூறப்படும் நிலையில் இந்த விண்கற்களை நாம் எப்போது காண முடியும்? என்பது பற்றி நாசா விளக்கம் அளித்துள்ளது.
அதாவது இன்று மே 30 ஆம் தேதி இரவில் இருந்து நாளை மே 31 ஆம் தேதி அதிகாலைக்குள் வால் நட்சத்திரத்தின் உடைந்த பாகங்களை பூமி கடந்து செல்லும் என தெரிவித்துள்ளது.
இந்த பாகங்கள் மிக விரைவாக வெளியே தள்ளப்படும்போது, பூமிக்கு அருகே வந்து எரிகல் மழையாக இருப்பதை போல நாம் காண முடியும். அனால் இந்த வால் நட்சத்திரத்தை இந்தியாவில் காண முடியாது. தெளிவான, இருண்ட வானில் வடஅமெரிக்க வானியலாளர்கள் டாவ் ஹெர்குலிட் மழையை காணும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். அதன்படி கிழக்கு கடற்கரை பகுதியில் அதிகாலை 1 மணியளவிலும், மேற்கு கடற்கரையில் இரவு 10 மணியளவிலும் இந்த வால் நட்சத்திரத்தை காண முடியும்.