வைரஸ் மூலம் புது வகையில் பணம் பறிக்கும் கும்பல்... போலீஸ் எச்சரிக்கை...
ரான்சம் என்னும் புதுவகை வைரஸ் மூலமாக கணினியில் உள்ள தரவுகளை முடக்கி கும்பல் ஒன்று பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தமிழக சைபர்கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லோரன்ஸ் ரான்சம்வேர் எனும் புதிய வைரஸ் கோப்புகளை முடக்குவதோடு மட்டுமல்லாமல் அதனை மீட்டெடுக்க பணம் பறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெரிய நிறுவனங்களின் வணிகக் கோப்புகளை முடக்குவதால் வேறு வழியின்றி அவர்கள் பணம் செலுத்தி கோப்புகளை மீட்டெடுக்க நேருகிறது என்றும், இந்த வைரஸ் எந்தவொரு கணினியையும் பாதிக்கும் என்பதால் தேவையற்ற வலைதளங்களை பார்வையிடுவது, லிங்குகளை கிளிக் செய்வது, வலைதளப் பயன்பாட்டில் இருக்கும்போது தேவையற்ற விளம்பரங்களை பார்வையிடுதல் போன்றவற்றை செய்யக்கூடாது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
உலக அளவில் பெருநிறுவனங்களிடம் இதுபோல் லட்சக் கணக்கில் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.