இலங்கையில் மீண்டும் பிரதமராகும் ரணில் விக்ரமசிங்கே

Ranil Wickremesinghe
By Irumporai May 12, 2022 10:35 AM GMT
Report

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. போராட்ட களம் வன்முறையாக வெடித்தது. இதனால் பொது சொத்துக்கள் சேதப்படுத்தி மற்றும் அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் இறங்கியுள்ளனர்.

இந்த சமயத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.  

இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமராக பதவி ஏற்றதும் கொழும்புவில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு ரணில் தனது பணிகளை தொடங்குவர் என தகவல் கூறப்படுகிறது.

இலங்கையில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மாலை 6.30 மணிக்கு பதவியேற்கிறார் என்றும் ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது.

ரணில் பதவியேற்பு குறித்து அவரது கட்சியின் ரத்தினபுரி மாவட்ட தலைவர் சுப்பையா ஆனந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கே 6வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.