”புதுச்சேரி முதல்வர் நான் தான்.. சந்தேகம் வேண்டாம்” என்.ரங்கசாமி உறுதி
தமிழகத்தோடு சேர்த்து புதுச்சேரிக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக - காங்கிரஸ் கட்சிகள் ஒரு கூட்டணியிலும், அதிமுக - பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் ஒரு கூட்டணியிலும் போட்டியிடுகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே நாராணயசாமி அரசு கவிழ்க்கப்பட்டது. அமைச்சர் நமச்சிவாயம் உட்பட பல காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசியலில் திருப்புமுனையாக பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்தத் தேர்தலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிடவில்லை. காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பாஜக கூட்டணியில் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என்பதில் குழப்பம் எழுந்தது.
என்.ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள பாஜக தயங்குவதாகவும், நமச்சிவாயத்தை முதல்வராக்க பாஜக நினைப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவெடுத்ததாக பேச்சுக்கள் அடிபட்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிமுக - பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி உறுதியானது.
ஆனால் அப்போதும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய என்.ரங்கசாமி, “புதுச்சேரி முதல்வர் நான்தான், யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
மக்கள் வாழ்க்கை நிலையை உயர்த்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியமைக்க வாக்களிக்க வேண்டும். புதுச்சேரியை காப்பாற்ற நல்ல கூட்டணி வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக உள்ளிட்டவற்றுடன் கூட்டணி.” என்று பேசியிருந்தார்.