புதுச்சேரி முதல்வரானார் ரங்கசாமி: ஆளுநர் தமிழிசை பதவி பிராமணம் செய்து வைத்தார்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்காவது முறை முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பதிவியேற்றார். துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டபேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த கூட்டணியின் தலைவராக இருந்த ரங்கசாமியை தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் ஒருமனதாக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆட்சியமைக்க உரிமை கோரும் கடித்ததை கடந்த மே 3ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம், ரங்கசாமி வழங்கினார்.
இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15-வது சட்டபேரவைக்கான முதலமைச்சர் பதவியை ரங்கசாமி ஏற்றார். துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரியில் 2001, 2006 காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு முறை முதலமைச்சராக பதவி வகித்த ரங்கசாமி. கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து பிரிந்து 2011 ஆம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி இரண்டே மாதத்தில் முதலமைச்சரானார்.
தொடர்ந்து தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் மீண்டும் நான்காவது முறையாக முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ரங்கசாமி ஆகஸ்டு 4, 1950 ஆம் ஆண்டு நடேச நடேசன் - பாஞ்சாலி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
இவர் புதுச்சேரியில் உள்ள தாகூர் கலைக்கல்லூரியில் இளங்கலைப் படிப்பும் மற்றும் புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பும் படித்தார். மிகவும் எளிமையான முதலமைச்சர் என்று பெயர் பெற்ற இவர், முதலமைச்சரான பின்பும் இருசக்கர வாகனத்தில் சட்டசபைக்கும், தொகுதிகளுக்கும் வந்தவர்.
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம், சென்டாக் தேர்வு மாணவர்களுக்கு மருத்துவ கல்வி வரை இலவசக் கல்வித் திட்டம், படுகை அணைகளை அமைத்து புதுச்சேரியின் நீர்வளத்தை மேம்படுத்தியது ஆகியவை இவரது ஆட்சிக்காலத்தின் குறிப்பிடத்தகுந்த சாதனைகளாகும்.