விஜய்யின் கூட்டணி கனவுக்கு செக் வைக்கும் பாஜக? முதல்வர் சொன்ன பதில்
கூட்டணி குறித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பதில் வெகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்
2026 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுடன், புதுச்சேரியும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.
30 தொகுதிகள் உள்ள புதுச்சேரியில், 15 தொகுதிகளை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி முதல்வராக உள்ளார்.

தமிழகத்தில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரியிலும் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வருகிறது.
சமீபத்தில் புதுச்சேரியில் பிரச்சாரம் செய்த தவெக தலைவர் விஜய், பாஜகவை கடுமையாக விமர்சித்த நிலையில், முதல்வர் என்.ரங்கசாமியை பாராட்டினார்.

அடுத்த தேர்தலை இதே கூட்டணியில் சந்திக்க பாஜக விரும்பும் நிலையில், பாஜக கூட்டணியில் அதிருப்தியுடனே ரங்கசாமி தொடர்வதாகவும், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இணக்கம் காட்டாமல் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனால், புதுச்சேரியில் தவெக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்தது.
முதல்வர் ரங்கசாமியின் பதில்
இந்நிலையில், 2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்துள்ள பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபீன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, கூட்டணியில் பாஜகவிற்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் விஜய் உடன் கூட்டணி செல்ல வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு "தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நன்றி வணக்கம்" என தெரிவித்துள்ளார்.

"புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும். கூட்டணி கட்சிகளை எப்போதும் மதிக்கும் கட்சியாக பாஜக உள்ளது" என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
பாஜக உடன் முதல்வர் ரங்கசாமியின் சந்திப்பு, கூட்டணி கனவில் இருந்த தவெகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.