மாஸ்க் அணியாததால் தான் எனக்கு கொரோனா வந்தது - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட உடன் ரங்கசாமி அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இந்நிலையில் தனக்கு ஏன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என முதல்வர் ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரங்கசாமி, ”ரோனா தொற்று, உலகிற்கு பெரிய சவால். இதை வெல்ல முக கவசம் அணிவதும், தடுப்பூசி போட்டுக் கொள்வதும் கட்டாயம். ஆனால், இவை இரண்டையும் நான் செய்யவில்லை.
அதனால், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டேன்.தேர்தலில் பணியாற்றும்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறினர். போட்டுக் கொள்கிறேன் என அலட்சியமாக இருந்து விட்டேன். அதன் பாதிப்பு எனக்கு தெரிந்தது.
இரண்டு தடுப்பூசிகளை போட அலட்சியம் காட்டியதால், நிறைய ஊசிகளை போட்டுக் கொள்ள வேண்டியதாகி விட்டது. இந்த டெஸ்ட், அந்த டெஸ்ட், ரத்த பரிசோதனை எல்லாம் செய்ய வேண்டியதாகி விட்டது.
அது மாதிரி நிலை எவருக்கும் வரக்கூடாது. அதனால், தடுப்பூசி விஷயத்தில் யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” என்றார்.