’துடிக்க துடிக்க எரிச்சு கொன்னுட்டாங்களே’..மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற கொடூரம் - இருவர் கைது!
ராமேஸ்வரத்தில் கடல் பாசி சேகரிக்க சென்ற மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க சந்திரா என்ற பெண் வழக்கம்போல் கடல்பாசி சேகரிப்பதற்காக நேற்று முன்தினம் வடகாடு மீன் பிடி கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது, கஞ்சா போதையில் இறால் பண்ணையில் வேலை பார்த்துகொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் சந்திராவை வழிமறித்து காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் அந்த பெண் உடுத்தியிருந்த சேலையால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பெட்ரோல் ஊற்றி உடலை எரித்துள்ளனர். வெகு நேரம் ஆகியும் தனது மனைவி வீடு திரும்பாததால் அவரது கணவர் சந்தேகத்தின்பேரில் தேடி சென்றபோது முட்புதர் ஒன்றில் அரைகுறை ஆடையில் எரிந்த நிலையில் தன் மனைவி இருந்ததை கண்டு கதறி அழுதுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 45 வயது மதிக்கத்தக்க சந்திராவை அருகில் இருந்த இறால் பண்ணையில் வேலை செய்த வடமாநில இளைஞர்கள் கேலி கிண்டல் செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து வடமாநில இளைஞர்கள் 6 பேரையும் அடித்து உதைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கும்பலை சேர்ந்த 2 பேர்தான் கடல்பாசி சேகரிக்க சென்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தெரிய வந்தது.
மேலும், அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க காசு திருமாங்கல்யம் உள்ளிட்டவற்றை திருடி ராமேசுவரத்தில் உள்ள நகைகளை அடகு வைத்து பணம் பெறவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் எந்த நகைக்கடையிலும் அந்த திருமாங்கல்யத்தை வாங்காததால் அதை துணியில் சுற்றி இறால் பண்ணையிலுள்ள தண்ணீர் தொட்டியில் வீசி உள்ளனர்.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், மல்லிகாவின் மகள்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதுகுறித்து மல்லிகாவின் இளைய மகள் கூறியபோது, “நேத்து காலையில பாசி எடுத்துட்டு வரேன்.. கவனமா இருன்னு சொல்லிட்டு கடலுக்கு போச்சு... திரும்ப இந்த நிலையில் வரும்னு நெனச்சி பாக்கலயே.. கடைசி பொண்ண கரை சேர்க்கணும்னு ரொம்ப கஷ்டப்பட்டுச்சி... என் கல்யாணத்தை பாக்காமையே எங்கம்மா போது..
அநியாயமா துடிக்க துடிக்க எரிச்சு எங்கம்மாவ கொன்னுட்டாங்களே பாவிங்க... அவனுங்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்கணும்... என்று தாயை இழந்த மகள் அழுது துடித்தார்.
இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ், ரஞ்சன் ராணா ஆகியோரை போலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும், ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், சம்பவம் நடைபெற்ற இறால் பண்ணைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை எடுத்துள்ளனர்.