‘ஹீரோயினை மட்டும் கல்யாணம் பண்ணாதீங்க’ - நடிகர் அஜித்துக்கு அட்வைஸ் கூறிய சக நடிகர் : சுவாரஸ்ய தகவல்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது அஜித், எச்.வினோத் கூட்டணியில் மீண்டும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்தின் பிறந்த நாளான மே 1-ந் தேதி இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித் கடந்த 1999-ம் ஆண்டு வெளிவந்த அமர்க்களம் படத்தில் நடிகை ஷாலினியுடன் ஜோடியாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது. அதன்படி இவர்களது திருமணம் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி நடைபெற்றது.
இந்த ஜோடிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். நடிகர் அஜித்- ஷாலினி தம்பதியின் 22-வது திருமண நாளான இன்று ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்தின் திரைத்துறையை சேர்ந்த நண்பர்களில் ஒருவரான நடிகர் ரமேஷ் கண்ணா ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, மாதவன் என தமிழ் திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் நண்பனாக நடித்துள்ளார்.
இவர் ஒரு முறை அமர்க்களம் படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அஜித் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக உருவெடுத்துக் கொண்டிருந்த காலம் அது. அப்போது, அவர் அஜித்திடம் நடிகையை மட்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று அறிவுரை கூறினாராம்.
அப்போது, ஷாலினி – அஜித் காதல் விவகாரம் ரமேஷ் கண்ணாவிற்கு தெரியாததனால், அவர் அப்படி கூறியுள்ளார். அஜித்தும் ரமேஷ் கண்ணாவின் அறிவுரையை எந்த ஆட்சேபனையும் கூறாமல் புன்னகையுடன் கேட்டுக்கொண்டே இருந்துள்ளார்.
இந்த சுவாரஸ்ய தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.