நீருக்கடியில் ரியலாக ஓடிய ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
இயக்குநர் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற காட்சிகளின் பின்னணி தகவல்கள் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெரும் பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜனவரி மாதம் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்று புத்தாண்டை முன்னிட்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்., இயக்குநர் ராஜமௌலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொகுப்பாளினி டிடி நீலகண்டன் இயக்குநர் ராஜமெளலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரிடம் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் மற்றும் விஜய் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களை காட்டி கேள்விகளை கேட்க ஒவ்வொருத்தர் குறித்தும் சூப்பரான மாஸ் தகவல்களை மூவரும் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
ஜூனியர் என்.டி.ஆர் காட்டில் ஓடி வந்து புலியை நேருக்கு நேர் சந்தித்து உருமும் காட்சியை டிரைலரில் பார்த்த டிடி நீலகண்டன் அந்த காடு சிஜியா என கேட்க அது ரியல் காடு தான். பல்கேரியா நாட்டில் உள்ள காட்டில் தான் ஓடினேன் என அவர் பதிலளித்தார்.
அதேபோல் படத்தில் இடம்பெற்ற ஒரு 4 செகண்ட் ஷாட்டுக்காக 4 நாட்கள் பயிற்சி செய்து ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக 40 அடி தண்ணீருக்குள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நிஜமாகவே ஓடினார்கள் என்றும் அது கொஞ்சம் கூட சிஜி இல்லை என்று சொன்னது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
டிரைலரை பார்க்கும் போது ஏகப்பட்ட சிஜி
காட்சிகள் உள்ளதாக கணிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு காட்சியும் ரியலாக பயிற்சி செய்யப்பட்டு எடுக்கப்பட்டது என்றும் ராஜமெளலி ஹீரோக்களால் எதுவும் சாத்தியம் என்றும் அந்தளவுக்கு எங்களை பெண்டு நிமிர்த்திவிட்டார் எனவும் இரு ஹீரோக்களும் தெரிவித்தனர்.