விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டதன் பயனாக இலங்கையில் சீனா கால் பதித்துவிட்டது - ராமதாஸ்

Srilanka hambanthota port
By mohanelango Jun 01, 2021 12:10 PM GMT
Report

இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை அரசு கொடுத்திருக்கிறது. இதன் மூலம் சீனா இலங்கையில் நிரந்தரமாக கால்பதிக்கப்போகிறது என்கிற அச்சம் எழுந்துள்ளது.

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றி இருப்பதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு குறிப்பாக தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "இலங்கைத் தலைநகர் கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகம் அமைக்க இலங்கைக்கு சீனா கடனை வாரி வழங்கியது. அந்தக் கடனை, இலங்கை அரசால் செலுத்த முடியாத நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகம், அதையொட்டிய 15,000 ஏக்கர் நிலங்களை சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது.

அப்பகுதிகளை ராணுவம் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை சீனாவுக்கு இலங்கை விதித்திருந்தது. ஆனால், இப்போது அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ள 660 ஏக்கர் நிலங்களை சீன இறையாண்மை கொண்ட பகுதியாக அறிவிப்பதற்கான சட்டம் அண்மையில், இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது.

இனி அந்தப் பகுதிகள் சீனாவின் அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்ட பகுதிகளாகவே இருக்கும். அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கைப்பற்றி அதன்மூலம் இந்தியாவை கண்காணிக்க வேண்டும் என்பது சீனாவின் நீண்டநாள் கனவு. இப்போது அதை சாதித்துக் கொண்டது மட்டுமின்றி, அங்கு கடற்படை தளத்தைக் கூட சீன அரசு அமைக்கும்.

விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டதன் பயனாக இலங்கையில் சீனா கால் பதித்துவிட்டது - ராமதாஸ் | Ramadoss Warns About China In Srilanka

அங்கிருந்து தமிழகத்தின் தென்பகுதிகளை கண்காணிக்கும் சீனா, தமிழகத்தின் ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு ஆகிய 3 தீவுகளை காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக தனியார் நிறுவனங்கள் மூலம் பெற்றிருக்கிறது.

கிட்டத்தட்ட தென்னிந்தியாவை இப்போது சீனா சுற்றி வளைத்திருக்கிறது. இலங்கையிலிருந்து சீனா மூலமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலுக்கு இந்திய அரசின் தவறான இலங்கை வெளியுறவுக் கொள்கைதான் காரணம்.

விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டதன் பயனாக இலங்கை வடக்கிலும், தெற்கிலும் சீனா கால் பதித்துவிட்டது. இன்னமும் இலங்கையை பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற கொள்கை நிலைப்பாட்டை இந்தியா தொடரக் கூடாது. மாறாக, சீனாவின் நண்பன் என்ற கோணத்தில் தான் இலங்கையை பார்க்க வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளின் முதற்கட்டமாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவதற்கு உதவ வேண்டும். ஐக்கிய நாடுகள் அவையின் உதவியுடன் இலங்கையில் தமிழர்களுக்கு தனித் தமிழீழம் அமைத்துக் கொடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் வலிமையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.