இறுதிவரை மாம்பழம் சின்னத்திற்காக வாக்கு கேட்காத ராமதாஸ்: பரபரப்பை கிளப்பிய சம்பவம்
பாமக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்காதது வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.
இந்நிலையில் நேற்று இரவு கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியை கிராமத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாமக வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டார். மங்கலம் கிராமத்திற்கு வந்த ராமதாஸ் தனது காரின் உள்ளேயே அமர்ந்து கொண்டு பாமக வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சியினர் வீடுதோறும் சென்று மாம்பழம் சின்னத்தை அறிமுகப்படுத்தி திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், செல்வகுமார் வெற்றி பெற பாடுபட வேண்டும் வெற்றி பெற்று மூன்று கூடைகளில் மாம்பழம் கொண்டு வரவேண்டும் உள்ளிட்டவை குறித்து பேசிய அவர் இறுதிவரை எந்த சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிவிக்கவில்லை. இது வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் காரில் அமர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டதால் அவரை பார்க்க வந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் பார்க்கமுடியாமல் சென்றனர். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்காக சரக்கு வாகனம் டாட்டா ஏசி வாகனத்தில் பொதுமக்களை அழைத்து வந்தது, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட எவ்வித வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பின்பற்றாமல் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.
சாலையில் முக கவசம் இன்றி செல்லும் ஏழை எளிய கிராமத்து மக்களுக்கு அபராதம் விதிக்கும் சுகாதாரத்துறையினர், தேர்தல் பிரச்சாரத்தின்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத அரசியல் கட்சியினர் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற கேள்வி பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் எழுந்துள்ளது.