6 மாதங்களில் 8 பேர் தற்கொலை; தமிழக அரசு உறங்கக்கூடாது - சீறிய ராமதாஸ்!
ஆன்லைன் ரம்மி குறித்து ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி
தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாட்டுகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து உயிரிழப்பும் சரமாரியாக உயர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட காஞ்சிபுரம், மாங்காட்டை சேர்ந்த சீனிவாசன் என்ற தனியார் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் எங்கெல்லாம் கடன் வாங்கி அவமானப்படுவார்கள் என்பதற்கு சீனிவாசன் தான் மோசமான எடுத்துக்காட்டு.
ராமதாஸ் கண்டனம்
31 வயதில் சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் அவரது மனைவி, 8 மாத குழந்தை ஆகியோர் ஆதரவற்றவர்களாகி உள்ளனர். கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகி உள்ள 8வது உயிர் சீனிவாசன்.
ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 6 மாதங்களாகியும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும். ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.