3 பாமக எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் - ராமதாஸ் தரப்பு அதிரடி
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக கட்சியில் மோதல் போக்கு நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து இருவரும் கட்சி நிர்வாகிகளை நீக்குவது, புதிய பொறுப்பாளரை நியமிப்பது, தனிதனியாக ஆலோசனை கூட்டம் நடத்துவது என தனி தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
அதேவேளையில், வன்னியர்கள் உள் ஒதுக்கீட்டை செயல்படுத்தாததை கண்டித்து விழுப்புரத்தில் இன்று அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி எழுப்பிய போது, "இட ஒதுக்கீடு சம்பந்தமாக யார் போராட்டம் நடத்தினாலும் வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.
3 எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
இந்நிலையில், பாமகவை சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்திருப்பதாக ராமதாஸ் ஆதரவாளரான பாமக தலைமை நிலைய செயலாளர் ம.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், சமீபகாலமாக பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய மூவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்துவரும் செயல் சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு.ஜி.கே.மணி அவர்களால் கட்சியின் தலைமைக்கு கொண்டுவரப்பட்டு கட்சியின் தலைமை நிர்வாககுழு அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பபட்டுள்ளது.
அந்த குழு, அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு இவர்களின் செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் அவர்களை பொய்யாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாக சொன்ன செயலும் ஒழுங்கீனமான செயல் என்பதை முதற்கட்ட விசாரனையில் தெரியப்படுத்தியதால், அவர்கள் மீது விரிவாக விசாரனை நடத்த வேண்டியிருப்பதால், நால்வரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.
முழுமையான விசாரனைக்கு, ஒழுங்கு நடவடிக்கை குழு முன் அவர்கள் நால்வரும் ஆஜராகி விளக்கம அளிக்க வேண்டியிருப்பதால் கட்சித் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் அவர்களிடம் விசாரனை முடியும் வரை எந்த கட்சி சம்மந்தமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விசாரனைக்குழு அவர்கள் நால்வரையும் விசாரனைக்கு அழைத்து விளக்கம் கேட்பதற்கு முழு அதிகாரமும் நிறுவனர் மற்றும் தலைவர் கொடுத்துள்ளார் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.