தக்காளி வெங்காயத்தை ரேஷன் கடைகளில் விற்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
விசிக நிர்வாகியை தாக்கிய தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராமதாஸ் பேசியுள்ளார்.
ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடியதை அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது கண்டிக்கதக்கது.
விசிக நிர்வாகியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல கோவில்களில் இதேபோல தீட்சிதர்கள் விளையாடக்கூடிய ஆபத்து நேரிடும் என்பதால் தீட்சிதர்கள் மட்டுமே விளையாடக் கூடிய கிரிக்கெட் மைதானத்தை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.
சாம்சங் போராட்டம்
எந்த பணி நியமனத்திலும் நேர்காணலில் முறைகேடு நடைபெறுகிறது. போட்டித்தேர்வின் அடிப்படையில் இப்பணி நியமிக்கப்பட வேண்டும். காலியாக உள்ள 6 பல்கலைக்கழக துணை வேந்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சில துணை வேந்தர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சாம்சங் தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொழிற்சங்கம் அமைக்க அரசும், நிறுவனமும் அங்கீகரிக்க வேண்டும். கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்க முடியாது என்று துணை முதல்வர் கூறியிருப்பது சரியல்ல.
மின் கட்டணம்
மின் கட்டணத்தை ரூ.5000 வரை ஆன்லைனில் செலுத்தவெண்டும் என்ற நிலையை திரும்ப பெறவேண்டும். . இதனால் ஆட் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வழிவகுக்கவேண்டும். இதனால் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்க நேரிடும்.
தக்காளி, வெங்காயத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளி கிலோ ரூ.120, வெங்காயம் ரூ.80 என விலை உயர்ந்துள்ளது. தீபாவளியையொட்டி இதன் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அரசு மொத்தமாக கொள்முதல் செய்து நியாய விலைக்கடை மூலம் குறைந்த விலையில் விற்கவேண்டும்.