நிதி மேலாண்மையில் தள்ளாடும் தமிழ்நாடு; எதிர்காலம் என்னவாகும் - ராமதாஸ் விமர்சனம்

Dr. S. Ramadoss Tamil nadu Government of Tamil Nadu India
By Karthikraja Jan 29, 2025 02:19 PM GMT
Report

நிதி மேலாண்மையில் தமிழக அரசு தள்ளாடுவதாக ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

ராமதாஸ்

தமிழகத்தில் நிதிநிலையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் உள்ள 18 பெரிய மாநிலங்களின் நிதி நிலைமை குறித்த விவரங்களுடன் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023-ம் ஆண்டுக்கான நிதிநலக் குறியீடு என்ற ஆவணத்தின்படி, நிதி மேலாண்மையில் தமிழ்நாடு 11-ம் இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

நிதி நலக் குறியீடு

செலவுகளின் தரம், கடன்களைத் தாக்குபிடிக்கும் திறன் ஆகியவற்றில் முறையே 14, 16 ஆம் இடங்களுக்கு தமிழகம் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டு நிதிநிலைமையின் எதிர்காலம் என்னவாகும்? என்ற கவலை எழுந்திருக்கிறது.

இந்தியாவின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை வகுத்துத் தருவதற்கான நிதி ஆயோக் அமைப்பு 2022-23ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களின் நிதிநிலைமை குறித்து நிதி நலக் குறியீடு (Fiscal Health Index) என்ற ஆவணத்தை வெளியிட்டுள்ளது. 

pmk ramadoss

7 வடகிழக்கு மாநிலங்கள், அசாம், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள் தவிர மீதமுள்ள 18 மாநிலங்களின் நிதிநிலைமை குறித்து நிதி ஆயோக் வெளியிட்ட ஆவணத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. நிதிநலக் குறியீடுகளில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களை விட பின்தங்கி 11-வது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.

வருவாய் செலவினம்

ஒடிசா மாநிலம் 67.8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு அதில் பாதிக்கும் குறைவாக 29.2 புள்ளிகளை மட்டுமே பெற்று முதல் 10 இடங்களில் வர முடியாமல் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. செலவுகளின் தரம் குறித்த வகைப்பாட்டில் 32 புள்ளிகளுடன் 14-ம் இடத்தையும், நிதி விவேகம், கடன் குறியீடு ஆகியவற்றில் முறையே 13-ம் இடத்தையும் தமிழ்நாடு பிடித்துள்ளது.

கடன்களைத் தாக்குப் பிடிக்கும் தன்மையில் 64 புள்ளிகளுடன் ஒடிசா முதலிடம் பிடித்துள்ள நிலையில் தமிழ்நாடு 11.1 புள்ளி மட்டுமே பெற்று 16-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வகைப்பாட்டில் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே தமிழகத்தை விட பின்தங்கியுள்ளன என்பது கவலையளிக்கும் உண்மையாகும்.

செலவுகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் வருவாய் செலவினங்களில் 52% ஊதியம், ஓய்வூதியம், கடன் வட்டி போன்ற உறுதிப்படுத்தப்பட்ட செலவுகளுக்கே சென்று விடுவதாகவும், மீதமுள்ள 48% நிதியில் பெரும் பகுதி மானியங்களுக்கே சென்று விடுவதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

தத்தளிக்கும் தமிழ்நாடு

2022-23 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.52,781 கோடியாக இருந்த நிலையில், நலத்திட்ட உதவிகளைக் கூட தமிழக அரசு கடன் வாங்கித் தான் செய்திருக்கிறது என்பதும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நிதி இல்லாத நிலையில் தான் தமிழ்நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதும் இந்த ஆவணம் மூலம் உறுதியாகியுள்ளது.

அதற்கு முன் திமுக ஆட்சிக்கு வந்த 2021-22 ஆம் ஆண்டில் நிதி நலக் குறியீட்டில் 15-ம் இடத்தையும், 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் சராசரியாக 12-ம் இடத்தையும் தான் தமிழகம் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்க தகவல்களாகும். 

pmk ramadoss

கடனைப் பொறுத்தவரை தமிழகத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடனைத் தாக்குபிடிக்கும் திறனில் தமிழகம் வெறும் 11.1 புள்ளிகளுடன் 16ஆம் இடத்தைப் பிடித்திருப்பதன் மூலம் கடுமையான நிதி அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறது. அடுத்த நிதி ஆண்டுகளில் பொது நிதியை மேலாண்மை செய்வதில் கடுமையான சவால்களை தமிழகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் இவை உணர்த்துகின்றன.

வருவாய் பற்றாக்குறை

தமிழகத்தின் நிதிநிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதையும், அதை எதிர்கொள்ள வரி அல்லாத வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தை ஆளும் கட்சிகள் அதை பொருட்படுத்தவில்லை என்பதையும், தமிழக பொருளாதாரத்தை தலைநிமிர்த்தப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, தமிழகத்தின் நிதி நிலை, கடன் சுமை ஆகியவற்றை இன்னும் மோசமாக்கி இருப்பதையுமே புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த திமுக, 2022-23ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.36,376 கோடியாக குறையும் என்று கூறியிருந்தது; ஆனால், அதற்கு மாறாக ரூ.52,781 கோடியாக அதிகரித்தது. 2023-24ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.26,313 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது நிதிநிலை அறிக்கை கணிப்புகளில் ரூ.37,540 கோடியாகவும், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.44,906 கோடியாகவும் அதிகரித்தது.

2024-25ஆம் ஆண்டில் ரூ.18,583 கோடி மட்டுமே வருவாய்ப் பற்றாக்குறையாக இருக்கும் என கணிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், நிதி நிலை அறிக்கையில் அது ரூ.49,278 கோடியாக அதிகரித்திருக்கிறது. 2025-26 ஆம் ஆண்டில் தமிழகத்தில் வருவாய்ப் பற்றாக்குறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, ரூ.1218 கோடி வருவாய் உபரி இருக்கும் என்று 2023-24ஆம் ஆண்டில் தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால், இப்போது வருவாய் உபரிக்கு வாய்ப்பில்லை என்றும், ரூ.18,098 கோடி வருவாய்ப் பற்றாக்குறை தான் ஏற்படும் என்றும் திமுக அரசு கூறியிருக்கிறது.

மதுவணிக வருவாய்

உண்மை நிலை என்னவென்பது மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது தான் தெரியவரும். நிதிநிலையை மேம்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுகவால், ஒருமுறை கூட வருவாய்ப் பற்றாக்குறை இலக்குகளை எட்ட முடியவில்லை. மதுவணிகத்தின் மூலமான வருவாயை நம்பியும், பத்திரப் பதிவுக் கட்டணங்களை உயர்த்துவதை நம்பியும் நடத்தப்படும் திமுக ஆட்சியில் நிதிநிலை மேம்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை.

நடப்பாண்டில் அடைக்கப்பட வேண்டிய ரூ.49,638 கோடி கடனை அடைப்பதற்கு தேவையான நிதி தமிழக அரசிடம் இல்லாத நிலையில், அதற்கும் சேர்த்து நடப்பாண்டில் ரூ.1,55,584 கோடி கடன் வாங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் கடன் வாங்குவதற்கு கூட இயலாத நிலை உருவாகிவிடும்.

எனவே, மக்களைப் பாதிக்காத வகையில் வரி அல்லாத வருவாயைப் பெருக்குதல், பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயக்குதல் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் நிதிநிலையை மேம்படுத்தவும், கடன் சுமையைக் குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.