நான் செஞ்ச பெரிய தப்பே அதுதான்; அருவருப்பா இருக்கு - எகிறிய ராமதாஸ்
அன்புமணியை பாமக தலைவர் பொறுப்புக்கு கொண்டு வந்தது தவறு என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி செயல்
விழுப்புரம், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், நான் அரசியலில் சில தவறுகளை செய்துள்ளேன். அதில் முதல் தவறு அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது.

2வது தவறு அன்புமணியை பாமக தலைவராக நியமனம் செய்டஹ்து. தற்போது நடக்கும் அத்தனை விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். என்னை ஐயா என்று அழைத்த சிலர், அங்கு சென்று என்னைப் பற்றி திட்டி பேசுகிறார்கள்.
பாமக எம்எல்ஏ-க்களில் 2 பேர் என்னுடன் இருக்கிறார்கள். 3 பேர் அன்புமணி கும்பலோடு தெரியாமல் போய்விட்டார்கள். தற்போது அன்புமணியின் செயல்பாடுகள் எதுவும் சரியாக இல்லை. அவரின் செயல்பாடுகள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது.
ராமதாஸ் ஆவேசம்
அமைதியாக பாமகவை நடத்திக் கொண்டிருக்கிற போது, அதில் பிளவு ஏற்பட்டதாக மக்கள் பேசுகிறார்கள். பாமகவில் பிளவு ஏற்பட்டுள்ளது என்று மற்றவர்கள் நினைக்கும் அளவிற்கு அன்புமணி செயல்பட்டு வருகிறார். இதுவரை என் தலைமையில் நடந்த போராட்டத்தில் வன்முறையோ, மோதலோ ஏற்பட்டதே இல்லை.

பாமகவை நான் பெரிதாக வளர்த்து வந்த நிலையில், நான் வளர்த்த பிள்ளைகளை அழைத்து அன்புமணியும், செளமியாவும் சில பொறுப்புகளை அளித்துள்ளனர். மேலும் என்னைப் பற்றியும், ஜிகே மணி பற்றியும் அவதூறு பரப்பி வருகின்றனர்.
என் கட்சிக்காரர்கள் மீது சுண்டு விரல் பட்டாலும், அதற்கு அன்புமணியும், செளமியாவும் தான் காரணம். அதேபோல் டிசம்பர் 30ல் பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. அந்தப் பொதுக்குழுவில் கூட்டணி மற்றும் மற்ற விஷயங்கள் குறித்து விவாதிப்போம். அப்போது என்ன கருத்து சொல்கிறார்களோ, அதன் அடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.