என் வீட்டிலேயே எனக்கு அருகிலேயே ஒட்டுக்கேட்கும் கருவி - ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு!
தான் அமர்ந்திருக்கும் இடத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒட்டுக் கேட்கும் கருவி
பாமக நிறுவனரான ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு வெடித்திருந்தது. ராமதாஸின் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும்,
அடுத்த நாளே நீக்கப்பட்டவர்களை ராமதாஸ் மீண்டும் அதே பொறுப்பில் இணைப்பதும் தொடர்ந்து நடந்து வந்தது. இதன்பின் அன்புமணி கூட்டணி குறித்து தன்னை கட்டாயப்படுத்தியதாக ராமதாஸ் பொதுவெளியில் போட்டுடைத்தார்.
மேலும், இனி வரும் காலங்களில் கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்றும், விருப்பமுள்ளவர்கள் இருக்கலாம், விருப்பம் இல்லாதவர்கள் கிளம்பலாம் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி நடந்த பாமக நிர்வாக குழுக் கூட்டத்தில், அன்புமணியை நிர்வாக குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார்.
ராமதாஸ் குற்றச்சாட்டு
ராமதாஸின் புதிய நிர்வாகி நியமனம் அறிவிப்பு லெட்டர் பேட்டில் அன்புமணி பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்காத நிலையில், அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்புமணி தனது பெயருக்குப் பின்னால், என் பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும், வேன்றுமென்றால் இனிஷியலாக முதல் எழுத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்றார். இந்நிலையில் விருத்தாசலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் ராமதாஸ்,
"என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர். ஒட்டு கேட்கும் கருவியை யார் எதற்காகப் பொருத்தினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் லண்டலில் இருந்து விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவியை வாங்கி பொருத்தி உள்ளனர்" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.