என்ன குறை வைத்தேன் அன்புமணிக்கு; கட்சியை பறிக்க சூழ்ச்சி - ராமதாஸ் காட்டம்
அன்புமணி பாமகவை பறிக்கச் சூழ்ச்சி செய்வதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுக்குழு கூட்டம்
பாமகவில் ராமதாஸ்-அன்புமணி மோதல் நிலவி வருகிறது. தொடர்ந்து பாமகவின் தலைமை அலுவலகம் என்று அன்புமணி அலுவலகத்தின் முகவரியை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.
மேலும், கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஆக.17-ம் தேதி நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கு போட்டியாக வரும் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பை சேர்ந்த வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில், தைலாபுரம் வீட்டிற்கு என்னை சந்திக்க அன்புமணி வரவில்லை, நான் கதவையும் அடைக்கவில்லை. என்னை சந்திக்க வந்ததாகவும், நான் மறுத்ததாகவும் அன்புமணி பொய் சொல்கிறார்.
ராமதாஸ் குற்றச்சாட்டு
கட்சியில் எனக்கு தெரியாமல் பல்வேறு உள்ளடி வேலைகளை அன்புமணி செய்து வந்தார். சூழ்ச்சி செய்து பாமகவை பறிப்பதற்கு அன்புமணி முயற்சி செய்கிறார். என் மீது பிரியமாக இருந்தவர்களை பணம் கொடுத்து அன்புமணி அவரது பக்கம் இழுத்தார். 48 ஆண்டுகாலம் கட்சியை கட்டிக்காத்தது நான் தான்.
கடுமையாக உழைத்து தண்ணீருக்கு பதில் வியர்வையை ஊற்றி கட்சியை ஒரு ஆலரமாக வளர்த்தேன். ஆலமரக்கிளையில் இருந்தே கோடாரியை செய்து அதே மரத்தை வெட்ட முயற்ச்சிக்கிறார். என் பிள்ளை அன்புமணிக்கு நாங்கள் என்ன குறைவைத்தோம்? மிகச்சிறந்த கல்வி கொடுத்தேன்.
எம்.பி., மத்திய மந்திரி என ஆக்கி அழகு பார்த்தேன். பாமக நிறுவனராக புதிய நிர்வாகிகளை சேர்க்கவும் மாற்றவும் எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஐயா, ஐயா என்று சொன்னவர்களை ராமதாஸ் என்று சொல்ல வைத்தது அன்புமணிதான். அன்புமணியிடம் கட்சியை கொடுத்துவிட்டு நான் தைலாபுரத்தில் டம்மியாக இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.