பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும்? பதிலளித்த ராமதாஸ்
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என ராமதாஸ் அறிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல்
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்படும் நிலை உள்ளது.

ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் பாஜக, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாமக 23 தொகுதியில் போட்டியிட்டு, 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

எந்த கட்சியுடன் பாமக கூட்டணி?
ஆனால், 2024 நாடாளுமண்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகி , பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணியில் பாமக போட்டியிட்டது.

சமீபத்தில், பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், தான் அதிமுக கூட்டணியில் இருக்கவே விரும்பியதாகவும், அன்புமணி ராமதாஸ் தான் பாஜக உடன் கூட்டணியை அறிவித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், அதிமுக கூட்டணியில் இருந்தால், சில தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என தெரிவித்தார்.
பாமக நிர்வாகிகள் ராமதாஸ் தலைமையில் ஒரு பிரிவும், அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஒரு பிரிவும் என பிரிந்து செயல்படுகின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் இதுவரை பாமக எந்த கூட்டணியில் இடம் பெறும் என வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸிடம், பாமக எந்த கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "எந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் வெற்றி ,கிடைக்குமோ, எந்த கட்சி ஆட்சி அமைக்குமோ அந்த கட்சியுடன் கூட்டணி சேர்வோம்" என தெரிவித்துள்ளார்.