போலீசை ஏமாற்றிய தசரதன் மகன் ராமன் - சமூக வலைத்தளத்தில் கிழியும் கேரள போலீசின் லட்சணம்

கேரளாவில் வாகன சோதனையின் போது போலி முகவரி கொடுத்த சம்பவத்தில் கேரள போலீசாரை சமூக வலைத்தளத்தில் இணையவாசிகள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். 

வாகன சோதனையின் போது போலீசிடம் சிக்காமல் இருப்பதற்காக சிலர் போலி முகவரி, பெயரை கொடுத்து தப்பிப்பது வழக்கம். அந்த வகையில் கேரளாவில் ஒரு வாலிபர் நம்பவே முடியாத வகையில் பெயரையும், முகவரியையும் கொடுத்து போலீசை ஏமாற்றி இருக்கிறார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சடையமங்கலத்தில் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் 2 நாட்களுக்கு முன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது சீட் பெல்ட் அணியாமல் வாலிபர் ஒருவர் காரை ஓட்டி வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய உதவி ஆய்வாளர் ரூ. 500 அபராதம் விதிக்க பெயர், முகவரியை கேட்டார்.

அதற்கு அந்த நபர் 'ராமன்' என்று கூறினார்.அப்பா பெயர் என்ன? என்று கேட்டதற்கு, 'தசரதன்' என்று வாலிபர் பதிலளித்தார். எந்த ஊர்? என கேட்டதற்கு சற்றும் தயங்காமல், 'அயோத்தி' என்று வாலிபர் கூற, அதையும் உதவி ஆய்வாளர்  எழுதி கொண்டு அபராத சீட்டை அவரிடம் நீட்டினார்.

இதை அனைத்தையும் அந்த வாலிபருடன் வந்திருந்த இன்னொருவர் ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்து போலீசை ஏமாற்றிய தசரதன் மகன் ராமன் என  சமூக வலைதளங்களில் பதிவிட இணையவாசிகள் கேரள போலீசின் அப்பாவி தனத்தை கிண்டலடித்து வருகின்றனர்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்