வேளாண் சட்டங்களை மக்கள் மதிக்கணும்- குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

government farmers parliament
By Jon Jan 29, 2021 04:02 PM GMT
Report

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசியுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த மக்கள் வேளாண் சட்டங்களை மதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவித்ததால் இந்திய பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலில் முக்கிய சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் விவசாய போராட்டத்திற்கு இடையே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்றைய பட்ஜெட் கூட்டத்தில் உரை நிகழ்த்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 'கொரோனா காலத்தில் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பல உயிர்களை காப்பாற்றி உள்ளது. சவால்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், இந்தியா ஒருபோதும் நின்றுவிடாது. கொரோனா பரவல், வெட்டுக்கிளி தாக்குதல், பறவைக் காய்ச்சல் என கடந்த ஆண்டில் பல சவால்களை கடந்து வந்துள்ளோம்' என கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து பேசிய அவர் 'கடந்த ஆண்டுகளில் மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது.

மக்கள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்' என கூறியுள்ளார். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்துள்ளனர்.

வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாயிகள் மத்திய அரசு இடையே உடன்பாடு எட்டாத நிலையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.