திருட்டுத்தனமாக ஐபிஎல் ஏலத்தில் தேர்வான சென்னை அணி வீரர் - விளையாட தடை விதிக்கப்படுமா?
ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்கு தேர்வான வீரர் செய்த திருட்டுத்தனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இதற்கிடையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பையை யாஷ் துள் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்த தொடரில் அசத்திய வீரர்கள் பலருக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. இதில் சென்னை அணி இந்திய 19 வயதிற்குட்பட்டோர் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த ராஜ்வரதன் ஹாங்கரேக்கர் என்பவரை ரூ.1.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.
சிறிய தொகைக்கு ஹாங்கரேக்கர் தனது பெயரை பதிவிட்டு இருந்தாலும் மணிக்கு 140 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாக பந்துவீசும் அவரது திறமை கண்டு அனைத்து அணிகளும் அவர் மீது போட்டி போட்டது.
இந்நிலையில் தற்போது ஹாங்கரேக்கர் ஒரு மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியதோடு அது தொடர்பான விசாரணைக்கு செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்வரதன் ஹாங்கரேக்கர் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடி கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தார். இருந்தாலும் அவருடைய உண்மையான வயது தற்போது 21 என்றும், ஆனால் அவர் பொய்யாக தனது வயதை 19 என்று குறிப்பிட்டு அணியில் இடம் பெற்றார் எனவும் கூறப்படுகிறது.
ஹாங்கரேக்கரின் உண்மையான பிறந்த நாள் ஜனவரி 10, 2001 ஆகும். ஆனால் அவர் நவம்பர் 10, 2002 என தான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது மாற்றியுள்ளார். இதனால் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் ஹாங்கரேக்கர் இடம் பெற்றார். அவர் தன்னுடைய பிறந்த தேதியினை மாற்றியுள்ளது உறுதியானதால் பிசிசிஐ என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வீரர் தனது வயதை மாற்றி ஏமாற்றியதால் அவருக்கு 2 ஆண்டுகள் பிசிசிஐயால் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.