நடிகர் சூர்யாவுக்கு எதிராக கிளம்பிய அடுத்த அமைப்பு - நாளுக்கு நாள் அனல் பறக்கும் ஜெய்பீம் சர்ச்சை
ஷத்ரியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக தயாரிப்பாளர் சூர்யாவும் படக்குழுவினரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா, நடித்து தயாரித்து கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியான ஜெய்பீம் படம் நாளுக்கு நாள் கடும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. படத்தில் இடம் பெற்ற காட்சிகளில் வன்னியர்களின் அடையாளம் இடம் பெற்றதாக பாமக மற்றும் வன்னியர் சங்கங்களின் நிர்வாகிகள், தொண்டர்கள் நடிகர் சூர்யாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன், காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் என பலரும் சூர்யாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் சூர்யாவுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் உள்ளதால் இப்பிரச்சனை நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம், வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்துவதாக அச்சமூகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக இந்திய அளவில் புகழ்பெற்ற ஷத்ரிய சங்கங்களில் ஒன்றான ஸ்ரீ ராஜ் புத் கர்னி சேனாவும் நடிகர் சூர்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் மகிபால் சிங் மகராணா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இப்படத்தில் படக்குழுவினர் ஷத்ரியனை வில்லனாக சித்தரித்துள்ளனர். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றும், ஹீரோ மற்றும் பாதிக்கப்பட்டவர் மற்றும் போலீஸ் ஐஜி கதாபாத்திரங்களுக்கு அசல் பெயரை வைத்துள்ளதாகவும், ஆனால் தயாரிப்பாளர் சூர்யா மற்றும் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் வில்லன் கதாபாத்திரத்தின் பெயரை மாற்றியுள்ளனர்.
இது 25 கோடி ஷத்திரியர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது.
படத்தில் தேவையில்லாமல் ஷத்திரிய சமுதாயத்தை இழிவுபடுத்தும் செயலை ராஜ்புத் கர்னி சேனா கடுமையாகக் கண்டிக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நீதிக்காகப் போராடிய ஷத்ரியரான கோவிந்தனைப் பற்றி குறிப்பிடவில்லை. 25 கோடி ஷத்ரியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக தயாரிப்பாளர் சூர்யாவும் படக்குழுவினரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜ்புத் கர்னி சேனா வலியுறுத்தியுள்ளது.