இன்னும் 5 வருடத்தில் தமிழகத்தில் மதுபானம் முற்றிலும் ஒழிக்கப்படும் - ராஜ்நாத்சிங் உறுதி
இன்னும் 5 வருடங்களில் தமிழகத்தில் மதுவை முற்றிலும் தடை செய்வோமென மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த பரப்புரை பொதுக் கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
அப்போது, தமிழ் பழமையான மொழி என்பதால் தனக்கு பிடிக்கும் என்றார். ஜெயலலிதா மிகவும் துடிப்பான, தைரியமான பெண் எனவும், அவரது வாரிசுகளாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர், கொரோனா காலத்தில் இந்திய தேசத்தை மட்டுமல்ல மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்கி அவர்களையும் மோடி காப்பாற்றி உள்ளார் என்று பெருமிதம் தெரிவித்தார்.
திமுக, காங்கிரஸ் கட்சிகள் சாதி, மத ரீதியிலான அரசியலை செய்யும் நேரத்தில் பிரதமர் மோடி சாதி, மத பேதமின்றி உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி அவர்களையும் சொந்தமாக மாற்றிக்கொண்டார் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் உயர்ந்த சிந்தனையோடு செயல்படாமல் திமுக பிரித்தாளும் கொள்கை செய்து வருவதாகவும், பாஜகவின் கண்ணியத்தை பார்த்து திமுக பயப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், பாஜக - அதிமுக கூட்டணி 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மதுவை முற்றிலும் தடை செய்வோம் எனக் கூறினார்.