ஊழல் பெருமுதலைகளுக்கு ஆதரவாக சீமான்? அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி
ஊழலில் சம்மந்தப்பட்டுள்ள பெருமுதலைகளுக்கு ஆதரவாக பேசுகிறாரே என்ற எண்ணம் வருகிறது என அமைச்சர் ராஜ்மோகன் சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஊழல் பெருமுதலைகளுக்கு ஆதரவாக சீமான்?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா? அல்லது அரசு நடத்தும் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா?, தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை தடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அமைச்சர் ராஜ்மோகன் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "தனியார் பள்ளிகள் ஒவ்வொரு சான்றிதழுக்கும் ரூ.25 லட்சம், ரூ.40 லட்சம் என பணம் கொடுத்ததை தவிர்த்து, பல்லாயிரம் கோடி ஊழலை தவிர்த்ததை தனியார் பள்ளிக்கான அனுகூலமாக பார்க்கக் கூடாது. இதனை ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்க வேண்டும்.

அரசு பள்ளிகள் தான் என்னுடைய கண்கள். நான் அமைச்சரானதும் போட்ட முதல் கையெழுத்தே அரசுப் பள்ளிகளில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகளில் பூட்டக்கூடிய கதவு வசதி இருக்க வேண்டும் என்பதற்கானது தான்.
தொடர்ச்சியாக அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்து வருகிறேன். சொன்ன தேதியில் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டோம். வெயிலின் தாக்கத்தை உணர்ந்து முதல்வருடன் கலந்தாலோசித்து பள்ளித்திறப்பதை தள்ளிவைத்தோம்.
வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றி நானே திறந்து வைத்தேன்.உண்டு உறைவிட பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து தேவையானதை செய்துகொடுத்தேன்.
தனியார் பள்ளிகளில் நடந்த பல்லாயிரம் கோடி ஊழல், அதற்கு எதிராக நாங்கள் பேசுவதை அவர்களுக்கான அனுகூலமாக பார்ப்பது தவறு. ஒருவேளை இந்த ஊழலில் பெருமுதலைகள் எல்லாம் சம்மந்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் எல்லாம் வெளியே வருவதால் அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறாரே என்ற எண்ணம் வருகிறது" என தெரிவித்துள்ளார்.