இந்தியாவிலே முதல்முறையாக AI மூலம் ஊழல் - திமுக மீது அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு
minister rajmohan accuse dmk did 1st ai corruption in india: இந்தியாவிலே முதல்முறையாக AI மூலம் திமுக ஊழல் செய்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு
கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் அம்பலப்படுத்தியுள்ளார்.

தங்கள் ஆட்சியில் புத்தகம் வாங்கப்பட்டதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக விசாரணையை எதிர்கொள்ள தயார் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், யாரும் தப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.
AI மூலம் ஊழல் செய்துள்ள திமுக
இதில் பேசிய அவர், பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஏஐ மூலம் திமுக ஊழல் செய்துள்ளது.
திமுக ஆட்சியில்தான் புத்தகங்கள் வாங்கப்பட்டு, அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. நூலக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெரியார் அறிவுலகம் நூலகத்துக்காக அகல் விளக்கு பதிப்பகத்துக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி ஆர்டர் கொடுக்கப்பட்டு, 7 நாட்களில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதற்கான பணப் பரிவர்த்தனை மார்ச் 14 ஆம் தேதி நடந்துள்ளது.
ஒரே ஒரு நபர் இரண்டு மற்றும் மூன்று பதிப்பகங்களை நடத்தி இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். போலி நூல்களில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்களின் பெயர்களைக் கண்டறிந்து கூறுபவர்களுக்குத் தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
சென்னை கன்னிமாரா நூலகத்திலும் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான புத்தகங்களை திமுக ஆட்சியில் வாங்கியுள்ளனர். மாணவர்கள், தமிழக மக்களிடம் மண்டியிட்டு திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
வெளிப்படையாக ஊழல் செய்துவிட்டு, திசை திருப்பும் வேலையில் திமுக ஈடுபட்டு வருகிறது. திமுக விஞ்ஞான ஊழல் செய்துள்ளது என கேள்வி பட்டிருப்போம். ஆனால் தற்போதுதான் பார்க்கிறோம். யாரும் இதில் இருந்து தப்பிக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.