ஆபாச பட வழக்கு..கொந்தளித்த நடிகை ஷில்பா ஷெட்டி...
ஆபாச பட தயாரிப்பு வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளப்போவதாக நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலியில் வெளியிட்டதாக சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் ஜாமின் பெறுவதற்காக தொடர் முயற்சியில் ராஜ் குந்த்ரா ஈடுபட்டு வருகிறார்.
இந்த வழக்கு தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் போலீசார் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை சேகரித்துள்ளனர். தனது கணவர் ஒரு அப்பாவி என்றும், அவர் ஆபாச படங்கள் தயாரிப்பதில் ஈடுபடவில்லை. பாலியல் ஆசையை தூண்டும் படங்களே எடுத்தார் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், தனது கணவர் மீதான ஆபாச பட தயாரிப்பு வழக்கை குடும்பத்தின் சார்பாக சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாக நடிகை ஷில்பா ஷெட்டி அறிவித்துள்ளார். கடந்த சில நாட்கள் தனக்கு சவாலானதாக அமைந்துள்ளதாகவும், பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகள், குற்றச்சாட்டுகள், வதந்திகள் தன்னை நோக்கி பாய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தன் மீது சுமத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள அவர், மும்பை காவல்துறை மற்றும் இந்திய நீதித்துறை மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும், ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது எனவும் தெரிவித்துள்ளார்.