எழுவர் விடுதலை குறித்த கடிதத்திற்கு காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை - கே.எஸ். அழகிரி பேட்டி..!
எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றும், அவர்கள் விடுதலையில் அரசியல் அழுத்தம் இருக்க கூடாது என்றும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், அவரது திருவுருவப் படத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்றைய தினம் எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு, தமிழக காங்கிரஸ் கட்சி ஒப்புதல் கிடையாது என்றும், ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை நீதிமன்றங்கள் தான் செய்ய வேண்டுமே தவிர, அரசியல் அழுத்தம் கொடுக்க கூடாது என்றும் கூறினார்.
மேலும், தமிழர்கள் 100க்கும் மேற்பட்டோர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர் என்றும், தமிழர்கள் என்ற ஒரு காரணத்திற்காக 7 பேரை மட்டும் விடுதலை செய்வது என்பது ஏற்புடையது அல்ல எனவும் கூறியுள்ளார்.