டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி இணையதளம் - சொன்னதை செய்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி 100 பேருக்கு இலவசமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான இணையதளம் பக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் ரஜினிகாந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது 71வது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடினார். இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைர்லாகின.
இதனிடையே பிறந்தநாளையொட்டி ரஜினி ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர் வெளியிட்ட அறிக்கையில், ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியை மேம்படுத்த ரசிகர்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ரஜினிகாந்த் பெயரில் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சிக்கான இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் விளிம்புநிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி சமூகத்தில் அவர்களை பொருளாதார ரீதியாகவும் உயர்த்திட அறக்கட்டளை ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டு மக்களின் கருணையும் அன்பும்தான் தனக்கு இவ்வளவு பெரிய புகழையும் பெயரையும் பெற்றுத் தந்ததாக ரஜினிகாந்த் எப்போதும் கூறுவார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் தான் முதல்கட்டமாக டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் விதமாக சூப்பர் 100 பிரிவிற்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு இலவச பயிற்சிக்கு https://www.rajinikanthfoundation.org/tnpsc.html என்ற இணையத்தில் பதிவு செய்யலாம். பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் சென்னையில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 10 ஜனவரி 2022 ஆகும்.