வெளியானது அண்ணாத்த பாடல்: டிவிட்டரில் எஸ்பிபி குறித்து உருக்கமாக பதிவிட்ட ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த'. இமான் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே படத்தின் முதல் பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கவிஞர் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளதால் பர்ஸ்ட் சிங்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்பாடல் வழக்கமான ரஜினி பாடலுக்கே உரித்தான வகையில் ஸ்டைலாக மாஸாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் பாடல் வெளியானதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பாடகர் எஸ்பிபி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்’ என தெரிவித்துள்ளார்.
45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
— Rajinikanth (@rajinikanth) October 4, 2021