ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தப்படும்: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் தகவல்

police actor political
By Jon Mar 02, 2021 07:29 PM GMT
Report

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்திடம் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும் என அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒருநபர் ஆணையத்தின் வழக்குரைஞர் அருள் வடிவேல் சேகர் தெரிவித்தார். இதுகுறித்து தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டியி, “தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 943 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 640 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

1089 ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டது. அடுத்த கட்ட விசாரணை மார்ச் 15 ஆம் தேதி தொடங்கும். காயம்பட்ட போலீஸார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 27 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தற்போது மேலும் 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் காணொலி காட்சி மூலம் ஆஜராக தயாராக இருப்பதாக கோரிக்கை விடுத்தார். அது சாத்தியமற்றது என்பதால் தூத்துக்குடி அல்லது சென்னையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகலாம் என ரஜினிகாந்தின் வழக்குரைஞரிடம் தெரிவித்துள்ளோம்.

அவரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. கண்டிப்பாக ரஜினிகாந்திடம் விசாரணை மேற்கொள்வோம்” என்றார். 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரத்தில் சமூக விரோதிகள் ஊடுருவினர் என ரஜினிகாந்த் பரபரப்பாக கூறியிருந்தார். இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவரும் விசாரணை வளையத்திற்குள் வந்திருந்தார்.