மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்? - ரசிகர்கள் உற்சாகம்
தனது மக்கள் மன்றத்தில் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் திங்கட்கிழமை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அரசியல் பிரவேசம் தொடங்கும் என சென்ற ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் ரஜினி அதனை தொடர்ந்து கொரோனா பேரிடர் காலத்தில் தம்மால் அரசியலில் ஈடுபட முடியாது என தெரிவித்து டிசம்பர் 29ம் தேதி அரசியல் நிலைபாட்டில் இருந்து பின்வாங்கி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் மக்கள் மன்றத்தில் இருந்து விலகி பல அரசியல் கட்சிகளில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து மௌனம் காத்துவந்த ரஜினி தனது சினிமா பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். அண்மையில் அண்ணாத்தே படப்பிடிப்பை முடித்து விட்டு தனது உடல்நிலை மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் மாற்று கட்சிகளுக்கு சென்ற நிர்வாகிகளுக்கு மாற்றாக பணியமர்த்தப்பட்ட நிர்வாகிகளையும் சில மாவட்டச் செயலாளர்களையும் சந்திக்க ரஜினி நேரம் ஒதுக்கியுள்ளார். இந்த சந்திப்பு வரும் ஜூலை 12 ஆம் தேதி திங்கட்கிழமை காலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசியலில் ஈடுபடவில்லை என்று அறிவிப்புக்குப் பிறகு நேரடியாக ரஜினி ரசிகர்களை சந்திக்க இருப்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.