மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தகவல் தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி வெளியிடாக நவம்பர் 4 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதால் ரஜினி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதனிடையே ரஜினியின் திரையுலக சாதனைகளை பாராட்டி சில தினங்களுக்கு முன் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. அன்றைய தினம் தனது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கியுள்ள ஹூட் என்ற செயலியை அவர் அறிமுகப்படுத்தியிருந்தார்.
இதனிடையே இன்றைய தினம் தனது குடும்பத்தினருடன் அண்ணாத்த படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படத்தைப் பார்த்துவிட்டு தனது இளைய பேரன் வேத் கிருஷ்ணா அடைந்த மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனைவி லதா ரஜினிகாந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.