ஜெயலலிதாவை எதிர்த்தது.. நைட் ஃபுல்லா தூக்கமில்ல - 30 ஆண்டுகளுக்கு பின் மனம் திறந்த ரஜினி
பாட்ஷா பட விழாவில் தான் பேசியது குறித்து ரஜினிகாந்த் நினைவு கூர்ந்துள்ளார்.
ஜெயலலிதா எதிர்ப்பு
தமிழக முன்னாள் அமைச்சரும் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் நினைவுகள் குறித்து ஆர்எம்வி கிங் மேக்கர் தி டாக்குமெண்டரி என ஒரு ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் முன்னோட்ட வீடியோவை சத்யா மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ஆர்.எம்.வீ குறித்து பேசியுள்ளனர். அவ்வாறு பேசியுள்ள ரஜினிகாந்த், "எனக்கு நெருக்கமா, மரியாதையா அன்போட என் மேல அன்பைக் காட்டினவங்க மூன்று, நான்கு பேர்.
பாலசந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வீ ஆகியோர். அவுங்கள் எல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன். பாட்ஷா 100 நாள் விழாவில் ஆர்.எம்.வீ தயாரிப்பாளராக மேடையில் இருந்தார். அப்போது வெடிகுண்டு கலாசாரம் பற்றி பேசினேன். அவரை அமைச்சராக வைத்துக்கொண்டு நான் அதைப் பேசியிருக்கக் கூடாது.
ரஜினிகாந்த் விளக்கம்
எனக்கு அப்போது அந்த அளவுக்குத் தெளிவு இல்லை. எப்படி நீங்க மேடையில் இருக்கும்போது, ரஜினி வெடிகுண்டு கலாசாரம் பற்றி அரசுக்கு எதிராகப் பேசும்போது நீங்க அமைதியா இருக்க முடியும் என்று கேட்டு, அவரை அமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா நீக்கிவிட்டார். அது தெரிஞ்சதும் எனக்கு ஆடிப்போச்சு. என்னாலதான் இப்படி ஆகிடுச்சுனு இரவு எனக்கு தூக்கமே வரல.
போன் செய்தேன் யாரும் எடுக்கல. காலைல போன் எடுக்கும்போது, என்ன மன்னிச்சிடுங்க சார், என்னாலதான் ஆச்சு என்று சொல்லும்போது, ஒன்றுமே நடக்காதது மாதிரி, விடுங்க அதையெல்லாம் நெனச்சு வருத்தப்படாதிங்க. பதவி என்ன அது.. நீங்க அத மனசுல வச்சிக்க வேண்டாம். விட்டுடுங்க அத. சந்தோஷமா இருங்க. ஷூட்டிங் எங்க? என்று சாதாரணமாக கேட்டாரு.
ஆனா, எனக்கு அந்த தழும்பு போகல, எப்பவும் போகாது. சிஎம் ஜெயலலிதாவுக்கு எதிராக நான் பேசுறதுக்குச் சில காரணங்கள் இருந்தாலும்கூட, இந்தக் காரணம் ரொம்ப முக்கியமானது. அதுக்கப்றம், நான் இதப் பத்தி பேசட்டுமானு அவர்கிட்ட சொல்லும்போது, அவங்க அவ்ளோ சீக்கிரம் மாத்திக்க மாட்டாங்க.
நீங்க பேசி உங்க மரியாதைய இழக்க வேண்டாம். அப்டி நீங்க சொல்லி நான் அங்க போய் சேர வேண்டிய அவசியமும் இல்ல. நீங்க விட்டுடுங்க என்று சொன்னாரு. அந்த மாதிரி பெரிய மனிதர் அவர். உண்மையான கிங் மேக்கர்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது கவனம் பெற்று வைரலாகி வருகிறது.