“என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து” - முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்
இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தன் நடிப்பு மற்றும் தனித்துவமான ஸ்டைலால் சிறுவர் முதல் பெரியவர் வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் 72ஆவது பிறந்ததினம் இன்று.
இதையொட்டி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ரஜினியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்.
நள்ளிரவு 12 மணிக்கு ரஜினியின் வீட்டு முன்பு, அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
மேலும், ரஜினி ரசிகர்கள் உள்ளிட்ட பலர் ரஜினிக்கு சமூகவலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், ரஜினியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,
'உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.