கலைஞர் வசனமா..? அதுல நடிக்குறதுக்கு கர்நாடக போய்டலாம்...ரகசியம் உடைத்த ரஜினி!!
கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி முரசொலி நாளிதழில் "தமிழ்த்திரை உலகத்தின் பார்வையில் கலைஞர்" என்ற தலைப்பில் ரஜினி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
ரஜினி கட்டுரை
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முரசொலி இதழில் "தமிழ்த்திரை உலகத்தின் பார்வையில் கலைஞர்" என்ற தலைப்பில் பல சினிமா பிரபலங்கள் கட்டுரை எழுத்து வரும் நிலையில்,இன்று ரஜினி எழுதியுள்ள கட்டுரை வெளிவந்துள்ளது. அந்த கட்டுரை வருமாறு - ‘‘கருணாநிதியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். எஸ்.பி.முத்துராமன், கருணாநிதி பற்றி விஷயங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார்.
எஸ்.பி.முத்துராமனின் தந்தை ராமசுப்பையா, திராவிட கட்சியின் தீவிர விசுவாசி. அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் செட்டிநாடு சென்றால், ராமசுப்பையா வீட்டில் தான் தங்குவார்கள். அங்கு தான் சில முக்கிய முடிவுகளையும் எடுப்பார்கள். முத்துராமன் சொல்ல சொல்ல, கருணாநிதி மீதான மதிப்பும், மரியாதையும் என்னிடம் அதிகமானது. தமிழ் திரை உலகின் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜியின் புகழ் உச்சத்திற்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தவர், கருணாநிதி.
அவர் எழுதிய பராசக்தி படத்தின் வசனங்களை பேசி தான், சிவாஜி உச்ச நட்சத்திரம் ஆனார். அதே போல எம்.ஜி.ஆருக்கு மருதநாட்டு இளவரசி, மலைக்கள்ளன் படங்களுக்கு கருணாநிதி எழுதிய வசனம் தான், அந்த படத்தை வெற்றி படமாக்கி, எம்.ஜி.ஆர்'யை நட்சத்திரமாக மாற்றினார்.
1977 ல் என்னுடைய TMU5004 பியட் காரில், மியூசிக் அகாடமி பக்கம் ஓட்டிக் கொண்டிருந்தேன். பின்னால் ஒரு வண்டி வந்து கொண்டிருந்தது. என் கார் கண்ணாடி மூலம் உள்ளே யார் என்று உற்று பார்த்தேன். நன்கு தெரிந்து முகம் தான். அது கருணாநிதி என்று தெரிந்தது. நான் இடது பக்கமாக ஒதுங்கி வழிவிட்டேன். எனது காரை கடந்த போது, அவர் என்னைப் பார்த்து விட்டார். அன்புடன் சிரித்து கைகளை ஆட்டினார். அந்த சிரிப்பு என் வாழ்நாளில் மறக்க முடியாது. அது தான் கருணாநிதியை நான் முதன் முதலில் பார்த்தது.
திரும்ப கர்நாடக போய்டலாம்
1980ல் ஒரு திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகியிருந்தேன். அதன் தயாரிப்பாளர், கருணாநிதியின் நண்பர். அந்த படத்தின் வசனங்கள், தயாரிப்பாளருக்கு திருப்தியாக இல்லை. படம் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன், என்னிடம் வந்த தயாரிப்பாளர், ‘நான் உங்களுக்கு மகிழ்ச்சியான விஷயத்தை சொல்கிறேன், கருணாநிதி நம் படத்திற்கு வசனம் எழுத ஒப்புக் கொண்டார்’ என்று கூறினார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. எளிய வசனங்களை பேசி நடிப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நான், கருணாநிதி வசனத்தை பேசி நடிப்பதா? நடிக்காத காரியம், இதற்கு நான் கர்நாடகாவிற்கு ஓடிப் போய், மறுபடியும் பேருந்தில் டிக்கெட் விற்க ஆரம்பித்துவிடலாம். முடியவே முடியாது என்று தயாரிப்பாளரிடம் கூறிவிட்டேன். இதை கேட்டு தயாரிப்பாளருக்கு இடி விழுந்தது போல் ஆகிவிட்டது.
‘உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் ஒப்புக்கொள்ளுங்கள், அவர் சம்மதித்த பிறகு, நான் எப்படி மறுக்க முடியும்?, அவரிடம் இதை எப்படி கூற முடியும்?’ என்று தயாரிப்பாளர் என்னிடம் கேட்டார். ‘அவரை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள், நானே அவரிடம் சொல்கிறேன்’ என்று கூறினேன். வேண்டா வெறுப்பாக அவரும் ஒப்புக் கொண்டார். கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்தேன். தமிழ்நாட்டிற்கே தெரிந்த லட்சணமான வீடு. ஒருவர் மட்டும் செல்லக் கூடிய படிக்கட்டு வழியே, அவருடைய உதவியாளர் சண்முகநாதன் என்னை அழைத்துச் சென்றார்.
1977 ல் மியூசிக் அகாடமியில் பார்த்த அதே முகம். அதே புன்னகை. ‘வாங்க வாங்க..’ என்று அவருக்கே சொந்தமான கரகரப்பு குரலில் அழைத்து நலம் விசாரித்தார். ‘கதை கேட்டேன்.. நன்றாக இருந்தது, சிறப்பாக வசனம் எழுதிடலாம்’ என்றார். ‘சார், உங்கள் வசனங்களை என்னால் பேச முடியாது, எளிமையான தமிழை பேசவே நான் சிரமப்படுகிறேன். உங்கள் வசனத்தை எப்படி என்னால் பேச முடியும்? தவறாக நினைக்க வேண்டாம்’ என்று அவரிடம் கூறினேன். குற்றவுணர்ச்சி அவர் சிரித்துக் கொண்டு, ‘எனக்கு யாருக்கு எப்படி எழுத வேண்டும் என்று நன்றாகவே தெரியும். சிவாஜிக்கு, எம்ஜிஆர்.,க்கு எழுதியது போல எழுதமாட்டேன். உங்கள் படங்களை பார்த்துள்ளேன். உங்கள் ஸ்டைலில் நான் எழுதுகிறேன்’ என்று சாதாரணமாக கூறினார்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. திடீரென ஒரு யோசனை தோன்றியது, ‘சார் படப்பிடிப்பில் சில வசனங்களை நாங்களே மாத்துவோம், உங்கள் வசனத்தை நீக்கவும், மாத்தவும் முடியாது’ என வேறு வழியில் கெட்டிக்காரத்தனமாக அவரை சமாளிப்பதாக நினைத்து கூறினேன். ‘மாற்றங்கள் ஒன்றும் தவறில்லை, அது என்ன திருக்குறளா?’ என்று அவர் கூறினார். அந்த பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் அமைதியாக இருந்தேன்.
அதை புரிந்துகொண்ட கருணாநிதி, ‘முன்னால் யார் வசனம் எழுதினாரோ, அவரை எழுதட்டும், நான் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டேன்.. நீங்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று கூறினார். அதன் பின் தயாரிப்பாளரை உதவியாளர் மூலம் அழைத்த கருணாநிதி, ‘படப்பிடிப்பிற்கான காலம் குறைவாக இருக்கிறது,ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வேலைகள் நிறைய இருக்கிறது. ஆகையால் என்னால் இந்த படத்திற்கு வசனம் எழுத முடியாது. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம்,’ என்று கூறி தயாரிப்பாளரை அனுப்பிவைத்தார்.
பிறகு என்னைப் பார்த்த கருணாநிதி, ‘திருப்தியா?’ என்று கேட்டார். தயாரிப்பாளரை புண்படுத்தாமல், என்னையும் திருப்தியபடுத்திய அவருடைய செய்கை, எனக்கு மதிப்பும் மரியாதையும் பல மடங்கு அதிகரித்தது. ஆனால், அவர் வசனத்தில் நடித்திருக்கலாமே, தவறு செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியும் இன்றும் எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது,’’