“தனுஷ் நல்ல மாப்பிள்ளை...நல்ல மருமகன்” - வைரலாகும் ரஜினியின் புகழ்ச்சி வீடியோ
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு சம்பவத்திற்கு நடுவே நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே கடந்த மாதம் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இந்த சம்பவம் ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தனுஷ் தயாரித்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாமனார் ரஜினி, மருமகன் தனுஷை புகழ்ந்து பேசுகிறார். அந்த வீடியோவில் “தனுஷ் என்னோட மாப்பிள்ளை என்பதற்காக சொல்லவில்லை. ரொம்ப நல்ல பையன்.தங்க பையன். அருமையான மனிதர். அப்பா, அம்மாவை மதிக்கிறார்.
அவங்களை தெய்வமா நினைக்கிறாரு. பொண்டாட்டியை நல்லா பாத்துக்கிறாரு. நல்ல அப்பா. நல்ல மாப்பிள்ளை. நல்ல மனிதர்” என ரஜினி புகழ்ந்து பேசுகிறார். இப்படி எல்லாம் ரஜினி புகழ்ந்து பேசிய போது, தனுஷ்-ஐஸ்வர்யா வாழ்க்கையில் பிரிவுக்கான காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ள முடியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அதேசமயம் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு ரஜினியால் இதுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விரைவில் இருவரும் இணைவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.