”அட இத்தனை நாளா தெரியாம போச்சே” : ரஜினி பற்றிய ரகசியம் - மேடையில் வெளிப்படையாக சொன்ன மகள் சௌந்தர்யா
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கியுள்ள hoote எனும் செயலி அறிமுக நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 15 இந்திய மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளில 'ஹுட்' வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கவுள்ள இந்த செயலி 60 வினாடி ஆடியோக்களை பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்து குரல் பதிவின் மூலம் தொடங்கி வைத்தார். அதில் தான் தாதா சாகிப் பால்கே விருது பெற்றுள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான குரல் பதிவு இடம் பெற்றிருந்தது.
மேலும் எழுத படிக்க தெரியாதவர்கள் இந்த செயலி வாயிலாக மற்றவர்களுக்கு தாங்கள் சொல்ல வரும்பும் கருத்துக்களை தங்கள் சொந்த குரல் வாயிலாக தெரிவிக்கலாம் எனவும், வருங்காலத்தில் Facebook, Instagram, twitter போல பிரபலம் அடைய வாழ்த்துவதாகவும் கூறியிருந்தார்.
நிகழ்ச்சியில் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், கிளப் ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேசஸ் போலல்லாமல் எவர் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் ஹூட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்ததாகவும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
அப்போது தனது தந்தைக்கு தமிழில் அதிகம் எழுத தெரியாது எனவும், ஒரு முறை குரல் வழியாக செய்தி அனுப்பியதே இந்த செயலியை உருவாக்க காரணமாக இருந்தது என்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார். இதனை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த விவாதமும் நடந்து வருகிறது.