மீண்டும் களமிறங்கிய ராஜேந்திர பாலாஜி ... ஸ்டாலின் மீது சரமாரி விமர்சனம்
ஆளும் திமுக கட்சியை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த அவர், மீண்டும் முழு வீச்சில் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.
அந்த வகையில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக ஆட்சியில் மக்கள் பல தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். அதற்கு மத்திய அரசைக் குறை சொல்லியே, காலம் கடத்தும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபடுகின்றனர் என குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் விலைவாசி உயர்வு, மின்வெட்டு பிரச்சனை என்பது வாடிக்கையாகி விடுகிறது. திமுகவுக்கு வாக்களித்ததற்குப் பொதுமக்கள் தற்போது வேதனைப்படுகின்றனர். எனவே திமுக அரசு விரைவில் முடிவுக்கு வரும். திமுகவால் அதிமுகவை அசைத்துப் பார்க்கமுடியாது. அடுத்து நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் வருகின்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும். என்னையும், கழக நிர்வாகிகளையும் போட்டியின்றி தேர்வு செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.