“நான் எப்பவும் அதிமுக தான்” - வதந்திக்கு ராஜேந்திரபாலாஜி முற்றுப்புள்ளி
பெரும் சர்ச்சைகளுக்கிடையே முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு புகார்களின் மீது கவனம் செலுத்தி இருக்கிறது. அந்த வகையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீடுகளில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திடீரென டெல்லிக்கு பயணம் செய்தார். அரசின் அடுத்த குறி ராஜேந்திரபாலாஜி தான் யூகங்கள் கிளம்பிய நிலையில், அவரின் டெல்லி பயணம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அதேசமயம் ராஜேந்திரபாலாஜி பாஜகவில் இணைய உள்ளார் என்ற தகவல் பரவிய நிலையில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே ராஜேந்திரபாலாஜி அதிமுகவில்தான் உள்ளார் என்றும், அவர் வேறு ஒரு கட்சியில் இணைய மாட்டார் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டெல்லியில் இருந்து திரும்பிய ராஜேந்திரபாலாஜி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்துள்ளார்.