அரசியலில் எந்த கட்சியும் நிரந்தரம் கிடையாது விளக்கம் கொடுத்த அண்ணாமலை .. ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகின்றாரா?
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சரை நேற்று சந்தித்து விரிவாகப் பேசியிருக்கிறேன்.
மற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அணை கட்ட முடியாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே காவிரி விவகாரம் ஏற்கனவே முடிந்துவிட்டது. அதனால் மற்ற கட்சிகள் வேறு வேலையை பார்க்கலாம் என கூறினார்.
மேலும் செய்தியாளர்கள் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் பா.ஜ.கவில் இணைவது குறித்து கேட்டபோது, யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. அதே சமயம் அரசியலில் எந்த ஒரு கட்சியும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது.
சில கட்சிகளில் உரிய தலைவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. சில கட்சிகளில் சுதந்திரமாக சிலரால் செயல்பட முடியாது. அதனால் தான் பா.ஜ.க.வை பெரும்பாலானவர்கள் தேடி வருகிறார்கள்.
எங்களுடைய சித்தாந்தத்தை நம்பி வருபவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமையின் பதிலும் ராஜேந்திர பாலாஜியின் திடீர் டெல்லிபயணமும் அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.