முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் அதிரடி கைது

arrested rajendra balaji tn police in kanataka
By Swetha Subash Jan 05, 2022 08:22 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பணமோசடி வழக்கில் தேடி வந்த நிலையில், கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் தமிழ்நாடு போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 3 கோடிக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரைத்தொடர்ந்து 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் சிலர் மீது விருதுநகர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி வழக்குத் தொடர்ந்த நிலையில் இதன்மீதான விசாரணையின் போது, ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார், முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து, ராஜேந்திர பாலாஜி மீது கடுமையான நடவடிக்கையும் கைது நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராஜேந்திர பாலாஜி கோரிய முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் படி அவரை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடுதல் பணி நடந்து வந்தது. அவரது உறவினர்கள் மற்றும் டிரைவர் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்ந்து போலிசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த அவரை கைது செய்ய லுக் அவுட் நோட்டிஸுகள் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் டெல்லியில் பதுங்கியிருப்பதாக கூறப்பட்டது. 

இந்த சூழ்நிலையில் தான் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகத்தில் வைத்து தனிப்படை போலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.