ராஜேந்திர பாலாஜி மீது குவியும் புகார்கள் - சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணை
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அடுத்தடுத்து மோசடி புகார்கள் குவிந்து வருகிறது. ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக தொடர்ந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் மீது பல்வேறு தரப்பினரும் புகார்களை கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், அவர் மீது ரூ.16 லட்சம் ரூபாய் வழக்கு பதிவு செய்ய, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் மதுரை கோமதியாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மகனுக்கு ஆவினில் கிளை மேலாளர் வேலை வாங்கி கேட்டதாகவும், அதற்கு வாங்கித் தருகிறேன் என்று ரூ.16 லட்சம் கேட்டதாகவும், அவரும் கொடுத்து இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாணகசேரியை சேர்ந்த பரமகுரு, கரூர் தாந்தோணி மலையைச் சேர்ந்த முத்துசாமி, திருச்சியை சேர்ந்த பிரின்ஸ் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார் செல்வராஜ்.
இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இதனையடுத்து, 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யக் கோரி செல்வராஜ் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று வருகிறது.