ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட் சென்ற ராஜேந்திர பாலாஜி

supremecourt அதிமுக chennaihighcourt ராஜேந்திரபாலாஜி KTRajendrabalaji
By Petchi Avudaiappan Dec 18, 2021 05:00 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதேசமயம் ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த இரு வழக்குளில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜியும், ஒரு வழக்கில் முன்ஜாமீன் கோரி மற்ற மூவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதி நிர்மல் குமார் நேற்று முன்தினம்  தீர்ப்பளித்தார்.

அதில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ராஜேந்திர பாலாஜி கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள நிலையில் அவரை கைது செய்ய 6  தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியான நிலையில் உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.